கேரளத்தில் விரலில் மோதிரம் சிக்கி தவித்த மணப்பெண் - தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்

மணப்பெண்ணின் கை விரலில் சிக்கிக்கொண்ட மோதிரத்தை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? என்று அவர்கள் ஆலோசித்தனர்.
கேரளத்தில் விரலில் மோதிரம் சிக்கி தவித்த மணப்பெண் - தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்
Published on

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளில், மணப்பெண்ணான அந்த இளம்பெண்ணின் கை விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டது.

இதனால் திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணப்பெண்ணுக்கு தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. அந்த வலியுடன் எப்படி திருமணம் செய்வது என்று மணப்பெண் வருந்தினார். இதனையறிந்த மணமக்களின் குடும்பத்தினர், திருமண நாளில் மணமகள் மற்றும் மணமகன் என இருவரையும் மஞ்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கை விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டதால் மணப்பெண் தாங்க முடியாத வலியால் துடிப்பது குறித்து தீயணைப்பு நிலையத்தில் இருந்த வீரர்களிடம் கூறினர். மணப்பெண்ணின் கை விரலில் சிக்கிக்கொண்ட மோதிரத்தை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? என்று அவர்கள் ஆலோசித்தனர்.

பின்பு உலோக பொருட்களை துண்டிக்கக்கூடிய கட்டரை பயன்படுத்தி மணப்பெண் கையில் சிக்கியிருந்த மோதிரத்தை வெட்டி எடுக்க முடிவு செய்தனர். மோதிரத்தை வெட்டி எடுக்கும்போது மணப்பெண்ணின் கையில் காயம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கட்டரில் சிறிய அளவு பிளேடு பொருத்தப்பட்டது. பின்பு கட்டர் இயக்கப்பட்டு மணப்பெண்ணின் கையில் சிக்கியிருந்த மோதிரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி எடுத்தனர். அதன் பிறகே மணப்பெண் நிம்மதி அடைந்தார். மிகவும் கவனமாக செயல்பட்டு மணப்பெண்ணின் விரலில் சிக்கியிருந்த மோதிரத்தை வெட்டி எடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து மணமக்கள் இருவருக்கும் தீயணைப்பு வீரர்கள் திருமண வாழ்த்து தெரிவித்து, அங்கிருந்து இருவரையும் வழியனுப்பி வைத்தனர். கைவிரலில் மோதிரம் சிக்கி அவதிப்பட்ட மணப்பெண், கேரள மாநிலம் மலப்புரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. உபைதுல்லாவின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com