

கத்தாரின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 12 இந்தியர்களில் நான்கு பேரின் உடல்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.
எக்ஸ் தள பதிவு:
"ராஸ் லஃபான் சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த 12 இந்தியர்களில் 4 பேரின் உடல்கள் நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன," என்று தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
மற்ற உடல்களையும் விரைவில் தாயகம் கொண்டுவர நம்புகிறோம். தூதரகம் குடும்பத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளது," என்று அது கூறியது.
66 பேர் காயம்:
"கத்தார் அதிகாரிகளுக்கும், இந்திய சமூக அமைப்புகளுக்கும் அவர்களின் ஆதரவிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் இருந்து வருகிறது," என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கத்தார் எனர்ஜி எல்.என்.ஜி. நிறுவனத்தால் இயக்கப்படும், ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இந்தியர்கள் உட்பட 66 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கத்தார், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, கானா, தான்சானியா, நைஜீரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.