மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வி: பாஜக- எதிர்க்கட்சி தலைவர்கள் வார்த்தைப் போர்

பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது தொடர்பாக பாஜக- எதிர்க்கட்சி தலைவர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வி: பாஜக- எதிர்க்கட்சி தலைவர்கள் வார்த்தைப் போர்
Published on

பாராளுமன்ற மக்களவையில் பெண்களுக்கான 33 சதவீது ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசிலமைப்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையில் 2 பங்கு ஆதரவு தேவை. ஆனால். மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு இல்லாமல் மசோதா தோல்வியடைந்தது. இந்த நிலையில் பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.

மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

நாட்டு பெண்களின் கோபத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள நேரிடும். இது காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் விழுந்த ஒரு கரும்புள்ளியாகும். இதை அவர்களால் ஒருபோதும் துடைத்தெறிய முடியாது. இந்தப் மசோதாவானது பெண்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதிநிதித்துவத்தை வழங்குவது குறித்ததாகும். இதில் ஆட்சேபிப்பதற்கு என்ன இருந்திருக்க முடியும்?.

பெண்களின் உரிமைகளைப் பறித்த பிறகு எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்; நாட்டின் பெண்கள் அவர்களுக்கு ஒரு தக்க பாடம் புகட்டுவார்கள்," என்றும் அவர் மேலும் கூறினார்.

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியதாவது:-

தென்னிந்தியாவிற்கும் அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். அங்கு நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கக்கூடும். பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டிய நிலையில், அந்த வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தலைமையின் கீழேயே இச்செயல் அரங்கேறியுள்ளது.

பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் கூறியதாவது:-

அவர்கள் பெண்களின் நம்பிக்கையை துரோகம் செய்துள்ளனர. உங்கள் இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய உண்மையை ஒவ்வொரு குடிமகனிடமும் நாங்கள் கொண்டு சேர்ப்போம்.

பாஜக (மத்தியப் பிரதேசம்) மகளிர் அணியின் பொதுச் செயலாளர் ஸ்வப்னா வர்மா கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியா கூட்டணியும் தங்களின் பெண் விரோத மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளன. கூட்டணி மற்றும் கட்சி சார்பற்ற ஆதரவு கோரி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த உண்மையான வேண்டுகோளையும் மீறி, அரசியல் பிடிவாதத்தால் உந்தப்பட்டவர்கள், ஒரு மசோதாவை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தேசத்தின் எதிர்பார்ப்பையும் தோற்கடித்துள்ளனர்.

இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியதாவது:-

நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம். வெள்ளிக்கிழமையன்றே இந்த மசோதாவை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றியிருப்போம். எங்கள் எதிர்ப்பு இடஒதுக்கீட்டிற்கு எதிரானதல்ல. மாறாக, அதனை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு எதிரானதே.

தொகுதி மறுவரையறை என்பது நாட்டின் எதிர்காலம் குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புவதாகும். அதனை அவசர கதியில் முன்னெடுக்க இயலாது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஜனநாயகத்திற்கும் மிகவும் முக்கியமான ஒரு விவகாரமாகும். இதற்குத் தீவிரமான, பரந்த அளவிலான விவாதங்கள் தேவைப்படுகின்றன. இது வெறும் இரண்டு நாள் அமர்வில் முடிவு செய்யக்கூடிய ஒரு விஷயமல்ல.

இது பெண்களைப் பற்றியதல்ல. மாறாக, ஒரு அரசியல் நாடகமே ஆகும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களை ஈட்டுவதற்காகப் பெண்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே அரசு ஒரு புதிய மசோதாவைக் கொண்டுவந்தால், நாங்கள் அதனை நிறைவேற்றித் தருவோம்.

எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் மற்றும் புதிய தொகுதி மறுவரையறைக்கான கட்டமைப்பு ஆகியவற்றை முக்கியமாகக் கருத்தில் கொண்டு, அனைத்துக் கட்சிகள் மற்றும் மாநிலங்களின் பங்கேற்புடன் இது குறித்து ஒரு தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கூறியதாவது:-

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் தொகுதி மறுவரையறையை இணைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் செய்தது போலவே, தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தங்களுக்குச் சாதகமான வகையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அவர்கள் விரும்பினர். அந்த முயற்சியும் தோல்வியடைந்துவிட்டது.

எவ்வித தாமதமும் இன்றி, 2023-ம் ஆண்டின் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டோஸ் கூறியதாவது:-

அரசாங்கத்தின் சந்தேகத்திற்குரிய மற்றும் வஞ்சகமான திட்டங்கள் படுதோல்வியடைந்துவிட்டன. தேசத்தை திசைதிருப்பும் நோக்கில் அவர்கள் பெண்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தினர். அவர்களிடம் துளியளவேனும் நேர்மை இருக்குமானால், தற்போதைய இடங்களின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை அவர்கள் அமல்படுத்தட்டும். இந்த அரசாங்கத்தின் எந்தவொரு உள்நோக்கங்களையும், சதித் திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடிக்கும்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியதாவது:-

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா ஏற்கனவே 2023-ல் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மீண்டும் திருத்தங்களை கொண்டு வர என்ன தேவை? அதன்பிறகும், முந்தைய சட்டமே அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க, விவாதிப்பதற்கும் வாக்களிப்பதற்கும் என்ன அவசியம்?.

மேற்கு வங்கத் தேர்தல்களை மனதில் கொண்டே இது செய்யப்பட்டது என்பது நாடு முழுவதற்கும் தெரியும். உங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்திருந்தும், இதைக் கொண்டு வந்ததில் என்ன பயன்? இதில் உண்மையான நோக்கம் இல்லை, அரசியல் உள்நோக்கமே இருந்தது என்பதை இது காட்டுகிறது.

இவ்வாறு ராம் கோபால் யாதவ் தெரிவித்தார்.

மசோதா மீதான வாக்கெடுப்பின்போது 528 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இதில் 298 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 230 பேர் எதிர்த்து வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு என்பது 352 எண்ணிக்கை ஆகும். 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தொகுதி மறுவரையறை மூலம் 543 எண்ணிக்கை 850ஆக உயர்த்தப்பட்டு, பெண்களுக்கு 33 சதவீதம் வாய்ப்பு என்பதை மசோதா வலியுறுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com