பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிப்பு!

அரசு ஊழியரை அவமானப்படுத்திய வழக்கில் பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிப்பு!
Published on

அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றி அவமானப்படுத்திய வழக்கில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு சிந்துதுர்க் நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மும்பை-கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் பிரகாஷ் ஷெடேகர் என்பவர் மீது நிதேஷ் ராணே மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேற்றை ஊற்றி, அவரை சகதியில் நடக்கவைத்தும் அவமானப்படுத்தினர்.

சாலைப்பணிகள் தரமற்ற முறையில் இருந்ததாலும், மழைநீர் தேங்கியதாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் அரசு ஊழியரைத் வேலை செய்யவிடாமல் தடுத்து, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நிதேஷ் ராணா உள்ளிட்ட 30 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

“மக்களின் குறைகளை முன்னிறுத்திப் போராடுவது நல்ல நோக்கமே என்றாலும், ஒரு அரசு ஊழியரைப் பொதுவெளியில் அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சட்டத்தை எவரும் கையில் எடுக்கக் கூடாது” என்று நீதிபதி வி.எஸ். தேஷ்முக் குறிப்பிட்டார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே நிதேஷ் ராணே தரப்பில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவரது தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இச்சம்பவம் நடந்தபோது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com