லாலு பிரசாத், ராப்ரி தேவிக்கு மீண்டும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

ராப்ரி தேவி தான் வசித்து வரும் பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை.
lalu prasad, rabri devi
Published on

பீகார் முன்னாள் முதல் மந்திரிகளான லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோருக்கு மீண்டும் 'இசட்' பிரிவு பாதுகாப்பை அம்மாநில அரசு வழங்கியது.

லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்டது. இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த போலீசார் எண்.10, சர்குலர் சாலை, பாட்னா என்ற முகவரியில் உள்ள அவர்களின் அரசு பங்களாவில் இருந்து வெளியேறினர்.

அத்துடன், அந்த பங்களா அமைச்சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஹார்டிங் சாலையில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள மாற்று இல்லத்துக்குச் செல்லுமாறும் ராப்ரி தேவிக்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், ராப்ரி தேவி தான் வசித்து வரும் பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை.

இந்நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்தும் மாநில பாதுகாப்புக் குழு பரிந்துரை பேரில் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை பீகார் அரசு மீண்டும் வழங்கியது. இதன்மூலம், இரு தலைவர்களுக்கும் குண்டு துளைக்காத பிரத்யேக வாகனம் மற்றும் சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும்.

முன்னதாக, இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது தலைவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com