நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான போக்குவரத்துத் துறை: 100 விமானங்களை ரத்து செய்யும் ஏர் இந்தியா... மத்திய அரசு தலையிட வலியுறுத்தல்

விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், கடும் அழுத்தத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ள இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான போக்குவரத்துத் துறை: 100 விமானங்களை ரத்து செய்யும் ஏர் இந்தியா... மத்திய அரசு தலையிட வலியுறுத்தல்
Published on

சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா தனது தினசரி விமான சேவைகளை சுமார் 10% வரை குறைக்க முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 1,100 விமானங்களை இயக்கி வந்த ஏர் இந்தியா, தற்போது சுமார் 100 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.

எரிபொருள் செலவை ஈடுகட்ட, தனது எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏற்கனவே இந்நிறுவனம் உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நீண்டதூர வழித்தடங்களில் அதிகளவில் விமான சேவைகள் குறைக்கப்பட உள்ளன.

ஏர் இந்தியா மட்டுமல்லாமல் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பிற இந்திய விமான நிறுவனங்களும் இதேபோன்ற நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

இதனிடையே இதுதொடர்பாக இந்த வார தொடக்கத்தில் இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியது.

அதில் விமான நிறுவனங்கள் தங்கள் விமானச் சேவைகளைக் குறைக்க நிர்பந்திக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தது.

மார்ச் மாதத்தில் இருந்து விமான எரிபொருள் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு இப்படியே தொடர்ந்தால் பல வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும், இதனால் பல்வேறு வழித்தடங்களில் சேவை நிறுத்தப்படும் என்று விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் (Economic Times) அறிக்கை கூறுகிறது.

“பெரும்பாலான விமானங்களில் நாங்கள் செயல்பாட்டுச் செலவைக் (operating cost) கூட ஈடுகட்ட முடிவதில்லை. விலை உயர்வு இதேபோல் நீடித்தால், நாங்கள் இன்னும் கூடுதலான விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டியிருக்கும்," என்று ஏர் இந்தியா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இண்டிகோ நிறுவனத்தை விட ஏர் இந்தியா அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு ஏர் இந்தியா அதிகப்படியான சர்வதேச விமான சேவைகளை வைத்திருப்பது காரணமாகும்.

இந்நிலையில் பாகிஸ்தான் வான்பரப்பும் மூடப்பட்டதால், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது; இது எரிபொருள் பயன்பாட்டையும், ஊழியர்களுக்கான செலவையும் மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் ஏர் இந்தியா ரூ.20,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், செலவுகளைக் கட்டுப்படுத்தி நிதி நிலையைச் சீராக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், கடும் அழுத்தத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ள இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA), இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com