எபோலா பரவல் எதிரொலி... கடும் கட்டுப்பாடுகளை விதித்த DGCA

விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எபோலா பரவல் எதிரொலி... கடும் கட்டுப்பாடுகளை விதித்த DGCA
Published on

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா நோய்த்தொற்று பதிவாகி வருவது குறித்த கவலைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவுடன் இணைக்கப்பட்ட விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு விரிவான நிலையான இயக்க நடைமுறையை (SOP) வெளியிட்டுள்ளது. இது, வரும் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதார பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாக்கியுள்ளது.

சாத்தியமான எல்லை தாண்டிய சுகாதார அபாயங்களுக்கு எதிராக இந்தியாவின் தயார்நிலையை வலுப்படுத்துவதையும், சர்வதேச பயணிகளிடையே எபோலா தொற்று சந்தேகிக்கப்படும் நபர்களை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதையும் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளிடம் கட்டாய சுகாதார தகவல்களை கேட்டுப்பெறவும், கடுமையான கண்காணிப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, விமான நிறுவனங்கள் சுகாதார பரிசோதனை தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதில், சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டறிதல், அவர்களை உடனடி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் விமான நிலைய சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை அடங்கும்.

மேலும், நோய்ப் பரவல் அபாயத்தை குறைப்பதற்காக, பயணத்தின்போது அறிகுறிகளை காட்டும் அல்லது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு தனித்தனி இருக்கை ஏற்பாடுகளை செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சுகாதார அறிவிப்பு படிவங்களைப் பூர்த்தி செய்வதை DGCA கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, அபாய வாய்ப்புள்ள நபர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், தேவைப்பட்டால் உரிய நேரத்தில் மருத்துவத் தலையீட்டைச் செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு உதவும் நோக்கம் கொண்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com