

மகராஷ்டிரா மாநிலம் நாக்காவைச் சேர்ந்த ஒருவர் பணம் எடுப்பதற்காக ஹிட்டாச்சி ஏடிஎம் மையத்திற்குச் சென்றார். அவர் 100 ரூபாய் எடுக்க பதிவு செய்தார். அப்போது 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு வெளிவந்தது. கணக்கிலிருந்து 100 ரூபாய் மட்டுமே பற்று வைக்கப்பட்டதாக செல்போனில் குறுந்தகவல் வந்தது.
மற்றொருவர் 400 ரூபாய் எடுக்க பதிவு செய்தபோது 500 ரூபாய் நோட்டுகள் 4 வந்தது. இதன் மூலம் அவருக்கு ரூ.2,000 கிடைத்தது.
இந்த விஷயம் உள்ளூர் மக்களுக்குத் தெரியவந்தது. ஏடிஎம் மையத்தில் மக்கள் போட்டி போட்டு பணம் எடுத்தனர். பெருமளவில் வரிசையில் நின்றனர். இந்த விஷயத்தை அறிந்த போலீசார், ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை அனுப்பி வைத்தனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 100 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கியின் தொழில்நுட்பக் குழுவினர் ஏடிஎம் மையத்திற்கு வந்தனர்.
பிரச்சனை தீர்க்கப்பட்ட பின்னரே ஏடிஎம் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று வங்கி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு காணொலி சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
அந்தக் காணொலிக்கு இணையவாசிகள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அவர்கள் 100 ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய் போட்டுள்ளனர். அதனால்தான் நான் 100 ரூபாய் எடுக்கும்போது, எனக்கு 500 ரூபாய் கிடைக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. இது பலமுறை நடந்துள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.