search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேதாந்தாவுடனான ரூ.16 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து: பாக்ஸ்கான் நிறுவனம் அதிரடி
    X

    வேதாந்தாவுடனான ரூ.16 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து: பாக்ஸ்கான் நிறுவனம் அதிரடி

    • வேதாந்தாவுடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.
    • இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது என பாக்ஸ்கான் கூறியுள்ளது.

    மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தி நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்க தேவையான முக்கிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    இந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவுடன் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலை அமைக்க ரூ.16,000 கோடி மதிப்பிற்கு ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.

    தற்போது இந்த ஒப்பந்தப்படி செயல்பட இயலாது என கூறி அந்நிறுவனம் விலகியுள்ளது.

    "பரஸ்பர ஒப்பந்தம் மூலம் முடிவு எடுக்கப்பட்டு, வேதாந்தாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது" என கூறியுள்ளது.

    இது குறித்து வேதாந்தா தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

    இந்தியாவை உலகளாவிய, உயர் தொழில்நுட்ப உற்பத்தி சக்தியாக மாற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியங்களுக்கு இந்த நடவடிக்கை பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    வேதாந்தாவுடனான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை வந்திருந்தால், இது மிகப்பெரிய ஒன்றாக இருந்திருக்கும்.

    இந்தியாவில் தெலுங்கானாவிலும் பெங்களூரூவிலும் தலா ஒன்று என இந்தியா முழுவதும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களை சீனாவிற்கு வெளியே தொழிற்சாலைகளை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

    அமெரிக்காவின் ஆப்பிள், சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை குறித்து பொதுவெளியில் நல்ல முறையில் கருத்துக்கள் கூறினாலும், தங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஃபாக்ஸ்கான் உட்பட அனைத்து உற்பத்தியாளர்களிடமும் தங்கள் எதிர்கால உற்பத்தியின் வினியோக சங்கிலி பாதிக்காத வகையில் சீனாவிலிருந்து வெளியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

    ஃபாக்ஸ்கானின் முடிவு இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை இலக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    Next Story
    ×