அஜந்தா, எல்லோரா குகைகள் மீண்டும் திறப்பு: தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

அஜந்தா, எல்லோரா குகைகள் மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி 2 டோஸ் எடுத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜந்தா, எல்லோரா குகைகள் மீண்டும் திறப்பு
அஜந்தா, எல்லோரா குகைகள் மீண்டும் திறப்பு
Published on

அவுரங்காபாத் :

கொரோனா அதிகரிப்பு காரணமாக சுற்றுலா நகரமான அவுரங்காபாத்தில் அமைந்துள்ள அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே முதல் மற்றும் 2-வது அலையின் போது கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் சுற்றுலா துறையை நம்பி இருந்த பலரும் வாழ்வாதாரத்தை இழந்தனர். 3-வது அலை காரணமாக மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், சுற்றுலா துறையை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும் 3-வது அலையால் நோய் தொற்று பரவல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததை அடுத்து மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அஜந்தா, எல்லோரா குகைகளும் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

இருப்பினும் நேரடியாக வந்து டிக்கெட் பெறும் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்து சுற்றுலா தலத்தை வந்து பார்வையிட முடியும்.

இதேபோல கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் முழுமையாக எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே சுற்றுலா தலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை தவிர, தவுலதாபாத் தேவ்கிரி கோட்டை, அவுரங்காபாத் குகைகள் மற்றும் பீபி கா மக்பரா ஆகியவை இங்குள்ள மற்ற முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com