search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க நகை-உடமைகள் கண்டெய்னரில் கொண்டுவர நடவடிக்கை- பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க நகை-உடமைகள் கண்டெய்னரில் கொண்டுவர நடவடிக்கை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.

    இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×