

கேரள மாநிலம் திருச்சூர் முண்டதிக்கோடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவிற்கான பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்புக் கிடங்கில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2,000 கிலோகிராம் மதிப்பிலான வெடிபொருட்கள் அந்த வளாகத்தில் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வெடிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மீட்புக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
காயம் அடைந்தவர்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கல்லூரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியவில்லை. ஆரம்பகட்ட விசாரணையில் பட்டாசு ரசாயனங்களைக் கலக்கும்போது இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அடுத்த சில நாட்களில் திருச்சூர் பூரம் விழா தொடங்கவிருந்த நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவசரகால மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய மீட்பு நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.