

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அப்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ராகவ் சத்தா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, ராகவ் சத்தா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
நேற்று முதல் எனக்கு எதிராக ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. அதே மொழி, அதே வார்த்தைகள், அதே குற்றச்சாட்டுகள். இது தற்செயலானது அல்ல, மாறாக ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல்.
முதலில், நான் பதிலளிக்கக் கூடாது என்று நினைத்தேன். பிறகு, ஒரு பொய்யை 100 முறை திரும்பத் திரும்பச் சொன்னால், சிலர் அதை நம்பிவிடக்கூடும் என்று நினைத்தேன். அதனால், பதிலளிக்க முடிவு செய்தேன்.
ஆம் ஆத்மி கட்சி 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் காரணமாக ராகவ் சத்தாவுக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்க மாட்டோம் என்றும் கூறியது.
முதல் குற்றச்சாட்டு என்னவென்றால், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்யும்போது, ராகவ் சத்தா அங்கேயே அமர்ந்திருக்கிறார் என்பதுதான். அவர் வெளிநடப்பு செய்வதில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்.
இரண்டாவது குற்றச்சாட்டு என்னவென்றால், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில், அதாவது அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான மனுவில் ராகவ் சத்தா கையெழுத்திட மறுத்துவிட்டார் என்பதுதான். இதுவும் ஒரு அப்பட்டமான பொய்.
ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு தலைவரும், முறைப்படியாகவோ அல்லது முறைசாராமலோ, இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடுமாறு என்னிடம் கேட்கவில்லை.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 6 அல்லது 7 பேர் அந்தத் தீர்மானத்தில் தாங்களாகவே கையெழுத்திடவில்லை. அப்படியென்றால் இதில் என் தவறு என்ன? ஏன் எல்லாப் பழியும் என் மீது சுமத்தப்படுகிறது?
நான் சத்தம் போடவோ, கூச்சலிடவோ, ஒலிவாங்கியை உடைக்கவோ, அல்லது தகாத வார்த்தைகளால் திட்டவோ நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை. நான் அங்கு சென்றது பொதுப் பிரச்சனைகளை எழுப்புவதற்காகவே என தெரிவித்துள்ளார்.