

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது, ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஒன்பது பேர் தடுத்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதிவுசெய்யப்பட்ட தேர்வர்களுக்கு பதிலாக இவர்கள் தேர்வில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் (SP) பிரேர்னா குமார் கூறினார்.
காவல் அதிகாரி பேட்டி:
"தேர்வின்போது NEET-UG தேர்வர்கள் போல ஆள்மாறாட்டம் செய்த சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான புகார்கள் பெறப்பட்ட பிறகு, இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படலாம்," என்று குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பயோமெட்ரிக் ஆபரேட்டர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட, இந்த முறைகேட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 10 முதல் 12 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
விசாரணை:
தடுத்து வைக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிடாத காவல் கண்காணிப்பாளர், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்த பிறகு கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்று குறிப்பிட்டார்.
பீகார் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.