‘80% அரசியல்வாதிகள் ஆபாசப் படங்கள் பார்க்கிறார்கள் ’ - பப்பு யாதவ் மீண்டும் சர்ச்சை பேச்சு!

கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் கல் எறியக் கூடாது என மகளிர் ஆணைய நோட்டீஸுக்கு பப்பு யாதவ் ஆவேச பதில்.
‘80% அரசியல்வாதிகள் ஆபாசப் படங்கள் பார்க்கிறார்கள் ’ - பப்பு யாதவ் மீண்டும் சர்ச்சை பேச்சு!
Published on

பீகாரின் பூர்ணியா தொகுதியின் காங்கிரஸ் ஆதரவுப் பெற்ற சுயேச்சை எம்பியான பப்பு யாதவ், அரசியலில் உள்ள பெண்கள் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. அதாவது 90% பெண்கள் ஆண் தலைவர்களின் அறைக்கு செல்லாமல் அரசியலில் நுழையமுடியாது என தெரிவித்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, பீகார் மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அவர், 70 முதல் 80 சதவீத அரசியல்வாதிகள் ஆபாசப் படங்கள் பார்ப்பதாக மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கர கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

“அரசியல்வாதிகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் என்பதை நான் நாடாளுமன்ற அவையிலேயே சொல்லியிருக்கிறேன். எனவே, அனைவரையும் சோதனையிடுங்கள். எனது கைபேசியில் ஆபாசப் படம் இருந்தால், என்னையும் சோதியுங்கள். எனக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்த ஆட்கள் யார்? அவர்கள் யாருடன் இருக்கிறார்கள்?

முன்னாள் அமைச்சர்களின் பல புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. கண்ணாடி வீட்டில் வசிப்பவர்கள் அடுத்தவர் மீது கல் எறியக் கூடாது. ஆண் அரசியல்வாதிகள் பெண்களைச் சுரண்டாமல் அரசியலுக்குள் விடுவதில்லை என்று நான் கூறியிருந்தேன். அது தவறா? நான் பெண்களுக்கான போராட்டத்தைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறேன். அவர்கள் பெண்களைச் சுரண்டுகிறார்கள்.” என தெரிவித்தார்.

மேலும், “755 ஆண் அரசியல்வாதிகள் மீது பாலியல் சுரண்டல் புகார்கள் உள்ளன மற்றும் 155 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது கறை படிந்த விஷயம். நான் ஆண் அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசினால், இவர்களுக்கு (மகளிர் ஆணையத்திற்கு) ஏன் இவ்வளவு கவலை? இந்த அரசியல்வாதிகள் பெண்களைச் சுரண்டுகிறார்கள், பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் பற்றிப் பேசுகிறார்கள்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com