

மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பவானிப்பூரில் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வினோதமான புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.
பவானிபூர் தொகுதியில் கள்ள ஓட்டு போடுவதற்காகத் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் 750 செயற்கை விரல்களை வாங்கியுள்ளதாகச் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கான ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் அவர் காண்பித்தார். இந்தச் செயற்கை விரல்களைப் பயன்படுத்தி கைரேகை மற்றும் மை வைக்கும் நடைமுறையை ஏமாற்றத் திரிணாமுல் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சுவேந்து அதிகாரியின் இந்தப் புகாரைத் திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. அதேசமயம், சமூக வலைதளங்களில் பலரும் இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அவரை விமர்சித்து வருகின்றனர்.
சுவேந்து அதிகாரி காண்பித்த புகைப்படம் கூகுளிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு சாதாரண சிலிகான் விரல் படம் என்றும் அவற்றை விரல் உறைகள் போல பயன்படுத்த முடியாது என்பதால் இந்தச் செயற்கை விரல்களைப் பயன்படுத்த திரிணாமுல் தொண்டர்கள் தங்களது சொந்த விரல்களை வெட்டி எடுக்க வேண்டியிருக்கும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.