

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 152 இடங்களுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வரலாறு காணாத அளவில் 93.19 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது.
அதனை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் எஞ்சிய 142 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வடக்கு 24 பர்கானாஸ் (33 தொகுதி) , தெற்கு 24 பர்கானாஸ் (31) , ஹவுரா (16) நாடியா (17), ஹூக்ளி (18) பூர்பா பர்தமான் (16) கொல்கத்தா (11) ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
காலையில் இருந்தே மக்கள் வாக்குச்சாவடிக்கு திரண்டு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல் 2 மணி நேரத்தில் 18.39 சதவீதம் வாக்குகள் பதிவானது. பூர்பா பர்தமான் மாவட்டத்தில் அதிக பட்சமாக 20.86 சதவீத வாக்குகளும், கொல்கத்தா தெற்கில் குறைந்தபட்சமாக 16.81 சதவீத வாக்குகளும் பதிவானது.
இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.