

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் 300-க்கும் மேற்பட்ட மாடுகளின் சடலங்கள் திறந்தவெளியில் கண்டறியப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பசுக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்படும் பாஜக அரசின் தொடர் கூற்றுகளுக்கு பின் இருக்கும் உண்மையை விவரிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்சல்மார் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலுள்ள ராம்கர் சாலையில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் இந்த அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள், இறந்த விலங்குகளின் எச்சங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டிய நகராட்சி ஒப்பந்ததாரரின் கடுமையான அலட்சியமே இதற்குக் காரணம் எனக் கூறுகின்றனர்.
ராஜஸ்தானில் நிலவும் கடும் வெப்ப அலை, நிழல் இல்லாமை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்த மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மாடுகள் குப்பைக் கிடங்குகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட நகராட்சி ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்சல்மார் மாவட்ட ஆட்சியர் அனுபமா ஜோர்வால் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் இதுகுறித்து முழுமையான உண்மை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.