

அமிர்தசரஸ் மீது வட்டமிட்டு கொண்டிருந்தபோது ஏர் இந்தியா விமானம் ஒன்று சர்வதேச எல்லையை கடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே, லாகூருக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் குறைந்தது மூன்று வர்த்தக விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைந்துள்ளன.
விமான பயண கண்காணிப்பு தரவுகளின்படி, ஜூன் 12-ஆம் தேதியன்று ஃப்ளை ஜின்னா நிறுவனத்தால் இயக்கப்படும் லாகூர்-துபாய் மற்றும் லாகூர்-ஜெட்டா விமானங்களும், ஏர் சியால் நிறுவனத்தின் தம்மாம்-லாகூர் விமானமும் பல நிமிடங்கள் இந்திய வான்வெளியில் நிலை கொண்டிருந்தன. அவற்றுள் ஒன்று 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்திய வான்வெளியில் இருந்துள்ளன.
மோசமான வானிலை:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை அன்று தாக்கிய மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமான போக்குவரத்து வட்டாரங்களை மேற்கோள் காட்டி, விமானங்கள் வழிமாற்றப்பட்டபோது லாகூர் மற்றும் அமிர்தசரஸில் உள்ள வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) பிரிவுகள் தொடர்பில் இருந்ததாக 'தி நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 22-ஆம் தேதியன்று, அமிர்தசரஸ் விமான நிலையத்தின் மீது வட்டமிட்டு மேலேறுவதற்காக பயிற்சி மேற்கொண்டபோது, ஏர் இந்தியா விமானம் AI479 சிறிது நேரம் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த விமானம் சுமார் 4:38 UTC (இந்திய நேரப்படி இரவு 9:38 மணி) அளவில் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்து, ஒரு நிமிடம் கழித்து வெளியேறியது.
ஏர் இந்தியா விவகாரம்:
ஏர் இந்தியாவும் காரணத்தை கண்டறிய ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஃபிளைட்ரேடார் 24 (Flightradar24) தகவலின்படி, AI479 விமானம் இரவு 9:38 மணிக்கு வாகா எல்லை அருகே பாகிஸ்தானுக்குள் நுழைந்து, வெளியேறுவதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு நிமிடம் எல்லையின் மறுபுறத்தில் இருந்துள்ளது.
தரையிறங்க முயன்றபோது அந்த விமானம் அமிர்தசரஸ் மீது வட்டமிட்டு பறந்ததாகவும் அந்த தரவுகள் காட்டுகின்றன. தரையிறங்குவதில் தோல்வியடைந்த அந்த விமானம், டெல்லி விமான நிலையத்திற்கே திரும்பியது.
கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற விமான நிறுவனங்களுக்கு தங்கள் வான்வெளியை மூடின.