

மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் பரவலை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் எபோலா வைரஸ் நோய் தொடர்பான கண்காணிப்பு மற்றும் தயார் நிலை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் விமான நிலையங்களில் எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இதனிடையே, எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், பெங்களூரில் உகாண்டாவை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
உகாண்டா நாட்டின் கம்பாலா பகுதியை சேர்ந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவருக்கு எபோலா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பெண்ணை தொடர்ந்து கண்காணித்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் பெங்களூரு வந்த பிறகு தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடததி வருகின்றனர்.