search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்களில் ‘வை-பை’ வசதி
    X
    ரெயில்களில் ‘வை-பை’ வசதி

    ரெயில்களில் ‘வை-பை’ வசதி ரத்து: மத்திய அரசு தகவல்

    வை-பை தொழில்நுட்பம், அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியான செலவுகளை ஏற்படுத்துவதுடன், இதன் செலவும் குறைந்ததாக இல்லை.
    புதுடெல்லி :

    ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக வை-பை வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்த அப்போதைய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், அடுத்த 4 அல்லது 4½ ஆண்டுகளில் ரெயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி முதற்கட்டமாக ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    ஆனால் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மக்களவையில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேற்று இதை தெரிவித்தார்.

    இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், ‘வை-பை தொழில்நுட்பம், அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியான செலவுகளை ஏற்படுத்துவதுடன், இதன் செலவும் குறைந்ததாக இல்லை. அத்துடன் இந்த வசதி மூலம் பயணிகளுக்கு போதிய அலைவரிசை கிடைப்பதும் இல்லை. எனவே இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தனர்.

    இதில் உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 630 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இந்த சண்டைகளில் 85 வீரர்களும் வீரமரணம் எய்தியதாகவும் அவர் கூறினார்.

    இதைப்போல மற்றொரு இணை மந்திரி (உள்துறை) அஜய்குமார் மிஸ்ரா கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, இந்தியாவில் கடந்த 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில் 1.71 லட்சம் கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

    இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 22,753 வழக்குகளும், ராஜஸ்தானில் 20,937 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.

    மேலும் எதிரி சொத்துகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கும்போது, நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட எதிரி சொத்துகள் அவற்றுக்கான பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 6,255 சொத்துகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்திருப்பதாக கூறிய, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி கவுஷல் கிஷோர், இதில் கடந்த 23-ந்தேதி வரை 70,601 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    ரியல் எஸ்டேட் சட்டத்தின் கீழ் கடந்த 23-ந்தேதி வரை 67,669 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    நாடு முழுவதும் கையால் துப்புரவு செய்யும் தொழிலாளர்களாக 58,098 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியான வீரோந்திர குமார், கழிவு நீரோடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் 941 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார். எனினும் கையால் துப்புரவு செய்யும்போது யாரும் இறந்ததாக தகவல் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×