

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்பூரை சேர்ந்த மகிமா ராஜ்புத் என்ற 10-ம் வகுப்பு மாணவி 'சக்திசாட்' திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது சர்வதேச விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் 108 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து மகிமா ராஜ்புத் கூறுகையில்,
நான் 'சக்திசாட்' திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனது பள்ளி முதல்வர் ஆசிரியரிடம் 'சக்திசாட்' திட்டம் குறித்து தெரிவித்ததையடுத்து, அவர் என்னை இத்திட்டத்திற்குப் பதிவு செய்தார்.
பதிவு செய்த பிறகு, அறிவியல் மற்றும் செயற்கைக்கோள்கள் குறித்த அடிப்படை கருத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் சில பாடத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. மொத்தம் 21 தொகுப்புகள் மற்றும் 365 பாடங்கள் இருந்தன. அவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.
செயற்கைக்கோள்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதில் மொத்தம் 108 நாடுகள் பங்கேற்கின்றன. நாங்கள் ஆகஸ்ட் 23-ந்தேதி டெல்லி செல்ல உள்ளோம். அங்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் ஒரு செயற்கைக்கோளையும், நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வரும் மற்றொரு செயற்கைக்கோளையும் நாங்கள் உருவாக்க உள்ளோம். பின்னர் அக்டோபர் மாதத்தில் அவற்றை விண்ணில் ஏவப்படும் என்று அவர் கூறினார்.