புதிய மணல் குவாரிகளை திறந்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்: முத்தரசன்

புதிய மணல் குவாரிகளை அரசு திறப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதிய மணல் குவாரிகளை திறந்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்: முத்தரசன்
Published on

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன் ஆய்வை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் அரசியல் உள்நோக்கத்தோடுதான் ஆய்வு செய்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனை கைது செய்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் மிரட்டுகிறார்.

ஆனால் தமிழகத்தில் அரசு துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்ல போகிறார்.

மத்திய அரசு தமிழக அரசை அடிமை போல் நடத்துவதால் தமிழக மக்களின் நலன் தான் பாதிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக ஆறுகளில் ஏற்கனவே மணல் சுரண்டப்பட்டு விட்டன. இந்த நிலையில் புதிய மணல் குவாரிகளை அரசு திறப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழகத்தில் வினியோகிக்க தடை இருப்பதை அரசு நீக்க வேண்டும்.


வருமான வரி துறையினர் போயஸ் கார்டனில் சோதனை நடத்துவதை விட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் வீடுகளில் சோதனையிட்டு, அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினால் தமிழக மக்களிடமிருந்து எவ்வளவு கொள்ளை அடித்தார்கள் என்பது தெரியவரும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு அந்த தேர்தலை நடத்தவில்லை. தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவார்களா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த பணப்பட்டுவாடா குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com