என் மகனுக்காக எம்பி சீட் கேட்டேனா?- ராகுல் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் பதில்

பாராளுமன்ற தேர்தலில் தங்களது மகன்களுக்காக சிலர் எம்பி சீட் கேட்டு நிர்பந்தித்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட தகவலுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் பதில் அளித்துள்ளார்.
என் மகனுக்காக எம்பி சீட் கேட்டேனா?- ராகுல் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் பதில்
Published on

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் என்று ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

குறிப்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு எம்.பி. சீட் கேட்டு மிரட்டியதை ராகுல் ஆதங்கத்துடன் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் காங்கிரசில் இருந்தே விலகி விடுவேன் என்று மிரட்டியதையும் ராகுல் அந்த கூட்டத்தில் விமர்சித்தார். அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது மகனுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட முதல்-மந்திரி பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com