

சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அதற்காக அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அசல் ஓட்டுனர் உரிமம் தொடர்பான தற்போதைய தமிழக அரசின் அறிவிப்பு திரும்ப பெறப்பட வேண்டும்.
வாகனங்களை ஓட்டி வரும் போது அசல் ஓட்டுனர் உரிமத்தை தவற விடுவதற்கான வாய்ப்பும் உண்டு. இந்நிலையில் வாகன ஓட்டிகள் தவறவிட்ட ஓட்டுனர் உரிமம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும், பின்பு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதற்கு காவல் நிலையத்தில் சான்றிதழ் வாங்க வேண்டும், அந்த சான்றிதழை ஆர்.டி.ஓ.விடம் கொடுக்க வேண்டும், ஆர்.டி.ஓ. மூலமும் விசாரிக்கப்பட்டு கிடைக்கவில்லை என்றால் புதிய ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் 20 ரூபாய் பத்திரத்தில் அசல் ஓட்டுனர் உரிமத்தை நான் தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று எழுதிக்கொடுக்க வேண்டும். பிறகு 10 நாட்களில் புதிய ஓட்டுநர் உரிமம் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் வரை போக்குவரத்து காவல் துறையின் பரிசோதனையில் இவர்கள் உட்படுவதற்கு வாய்ப்புண்டு. இத்தகைய பரிசோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறுகளும், அச்சுறுத்தலும் ஏற்படும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே தமிழகத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார், லாரி, ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களை இயக்குபவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாததற்கு உரிய காரணம் இருந்தால் அதனை ஏற்று அவர்களின் போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.