ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிவிட்டது: மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்திவிட்டது என கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிவிட்டது: மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களிடையே மான் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இந்த வகையில், 34-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் இன்று மோடி பேசியதாவது:- 

ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி ஒரு மாத காலம் ஆகியுள்ள நிலையில் மக்களிடையே ஜி.எஸ்.டி.க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிவிட்டது. அனைத்து முடிவுகளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக எடுத்தது.  இது ஒத்துழைப்பு கூட்டாச்சிக்கு ஒரு நல்ல உதாரணம். வெற்றிகரமாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதன் மூலம் மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக விளங்கும். ஜி.எஸ்.டி.யின் மூலம் அரசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே நல்ல நட்பு ரீதியான சூழல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளையரை வெளியேற்றும் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் தலைமைத்துவம், அனைவர் நினைவிலும் இருக்கிறது. அந்த போராட்டத்தில் பங்குபெற்ற லோக் நாயக், லோஹியா போன்ற தலைவர்கள் நம் நினைவில் இருக்கிறார்கள். வெள்ளையரை வெளியேற்றும் போராட்ட முழக்கத்தை டாக்டர்.யூசப் மெஹர் அலி தான் உருவாக்கினார் என்பது நம்மில் சிலருக்கு தான் தெரியும்.

இப்பொழுது நாம் நாட்டிற்காக உயிரை விட வேண்டியது இல்லை. நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துசெல்ல நாட்டிற்காக நாம் வாழவேண்டும்.

எனது சுதந்திர தின உரை மிகவும் நீளமாக இருப்பதாக என்னிடம் சிலர் கூறினர், எனவே இந்த ஆண்டு 40-50 நிமிடங்களில் உரையை நிறைவுசெய்ய நினைக்கிறேன். வெள்ள பாதிப்புகள் குறித்து அனைத்து நேரங்களிலும் நடவடிக்கைகள் எடுக்க 1078 என்ற உதவிமைய எண் செயல்பட்டு வருகிறது.

நாம் ஒரு உறுதிமொழி எடுக்கவேண்டும். சுத்தமின்மையை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், வறுமை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், பயங்கரவாதத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், சாதியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், மதவாதத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் உரையாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com