

ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான ஐந்தாம்கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திவீர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள சாஹேப்கன்ஜ் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய குடியுரிமை சட்டம் குறித்த பொய்யான தகவல்களை பரப்பி நாட்டில் உள்ள முஸ்லிம்களிடையே பதற்றமான சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்குகிறது. ஆனால், இந்த சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என நான் உறுதியளிக்கின்றேன்.
பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மதரீதியாக ஒடுக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த மக்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காகவும் அந்நாடுகளுக்கு மீண்டும் செல்லவே முடியாத பரிதாப நிலையில் இங்கு வாழ்பவர்களுக்காகவும் இந்த சட்டம் திருத்தப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து வரும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை அளிப்போம் என பகிரங்கமாக அறிவிப்பதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தயாரா என்று நான் சவால் விடுகிறேன்.
'நகர நக்சல்கள்’ இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைக்கின்றனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மூலம் முஸ்லிம்கள் அல்லது வேறெந்த இந்திய குடிமகனின் உரிமையை எப்படி அபகரித்துவிட முடியும்? என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்'
இவ்வாறு அவர் கூறினார்.