

போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் கோர்ட்டில் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக தங்கதமிழ்செல்வன் இன்று ஆஜரானார். வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும், அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் செயல்படமுடியாது என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு ஒட்டு மொத்த கட்சி நிர்வாகிகளால் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவரால் அவைத்தலைவராக செங்கோட்டையன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதனை மட்டும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் தினகரன். எனவே அவர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய அதிகாரம் உள்ளது. இதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஒரே விமானத்தில் ஓ. பன்னீர்செல்வத்துடன், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஒன்றாக சென்றதில் தவறு ஏதும் இல்லை. 300 பேர் செல்லக்கூடிய விமானத்தில் ஒருவருக்கு வேண்டியவர்கள் மட்டுமே செல்லவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. முன்னாள் முதல்வர் என்ற முறையிலும் அவரும் அ.தி.மு.கவில் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர். எனவே அவரை முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் சந்தித்து பேசியதில் தவறு இல்லை.
டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் மாவட்டந்தோறும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார். அவரது சுற்றுப்பயணம் மதுரையில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். வருகிற 29-ந் தேதி தேனி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும். இதனை மாநாடு போல நடத்த முடிவு செய்து உள்ளோம்.