

சென்னை:
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடி என்னும் கிராமத்தில் 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் 3 கட்டங்களாக இந்திய தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டது.
இதில் 2-ம் கட்டத்தில் இருந்து இன்னும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சியில், சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் தொல்பொருட்கள், வாழ்விட பகுதியில் வீடுகள் இருந்ததற்கான கட்டுமானங்கள் மற்றும் சான்றுகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.
செங்கல் கட்டுமானங்கள், சுடு மண்ணால் ஆன உறைக்கிணறுகள், அரிய கல் மணிகள், யானை தந்தத்தினால் ஆன பொருட்கள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. இவை பண்டைய தமிழ் மக்களின் நாகரிக வாழ்வினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டுவரும் பகுதி (தொல்லியல் மேடு) 100 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
ஆனால் குறைந்த நிலப்பரப்பிலே அகழாய்வு குழிகள் அமைக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு தொல்லியல் பொருட்களை வெளிக்கொணரவேண்டும் என்ற நோக்கில், கீழடியில் 2017-18-ம் ஆண்டில் 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம் அனுமதி கோரியிருந்தோம்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் அகழாய்வு மேற்கொள்ள அதிகாரம் வழங்கியுள்ளது. இந்திய தொல்லியல் துறையோடு, தமிழக அரசு தொல்லியல் துறை இணைந்து மேற்கொள்ள உள்ள அகழ்வாராய்ச்சியில் இன்னும் பல அரிய பொருட்களை வெளிக்கொண்டுவர இயலும்.
அடுத்த மாதம் இதற்கான பணிகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். தமிழக தொல்லியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆர்.சிவானந்தம், ஜே.பாஸ்கர் ஆகியோர் தலைமையில் அகழ்வாராய்ச்சி நடைபெறும்.
இதன் வாயிலாக தமிழகத்தில் பண்டைய அரசியல், சமுதாய, பொருளாதார மற்றும் பண்பாட்டினை முழுமையாக வெளிப்படுத்த இயலும். இந்த அகழ்வாராய்ச்சி பணிக்காக சிறப்பு திட்டமாக கருதி ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது.
புரதான சின்னங்களை பொக்கிஷப்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக திகழ்கிறது. 35 அருங்காட்சியகம் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழ் சார்ந்த வரலாறு தவறாக சித்தரிக்கப்படாமல் இருப்பதற்கு, ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.
இதற்காக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற நகர்ப்புற நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்துக்கு நிகராக இருக்கிறதா? என்று கண்டுபிடிக்கப்படவேண்டியது இருக்கிறது.
கீழடி அகழ்வாராய்ச்சியினை தன்னிச்சையாக தமிழக அரசு நடத்தும். எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை உலகத்தில் முதல் 15 இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்றாக கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொல்லியல் உணர்வு ஊட்டப்படும். அருங்காட்சியகங்களை சுற்றிப் பார்க்க வரும் மாணவர்களுக்கு தொல்லியல் பொருட்கள் குறித்து விளக்குவதற்காக வழிகாட்டிகள் (கைடு) நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கீழடியில் 3-ம் கட்ட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் நேற்று மூடப்பட்டன. குழிகள் மூடும் பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீராமன் கூறும்போது, கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணிகள் மத்திய அரசு தெரிவித்தால் மட்டுமே நடைபெறும் என்றார்.