கூடுதல் குடிநீர் வழங்க ரூ.900 கோடியில் திட்டம்- ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரி மாவட்ட மக்களுக்கு கூடுதல் குடிநீர் வழங்க ரூ.900 கோடியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன்திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
Published on

தர்மபுரி:

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்குதல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தப்படும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஒருநாளில் ஒருவருக்கு 30 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த அளவை 55 லிட்டராக உயர்த்தும் நோக்கத்துடன் ரூ.900 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 251 ஊராட்சிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளில் தடையின்றி குடிநீர் வழங்கப்படும். இதுதொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி பின்னர் மத்திய அரசின் நிதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பகுதி-1 ஜல்ஜீவன் மிஷன் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்குதல் மற்றும் புளோரைடு குறைப்பு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை போல் இந்த புதிய திட்டத்திற்கும் நாளொன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க மத்திய நீர் பயன்பாட்டு குழுவின் அனுமதி பெற வேண்டியுள்ளது. தலைமை நீரேற்று நிலையம் அமைக்க ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் கரையோரத்தில் சுமார் 1.4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் ஒகேனக்கல் சின்னாற்றின் குறுக்கே குடிநீர் குழாய் அமைப்பதற்கு உயர்மட்ட பாலம் அமைக்க பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெறப்படும்.

பென்னாகரத்தை அடுத்த மடம் கிராமத்தின் அருகே இந்த திட்டத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலையம், பிரதான சமநிலைநீர்த்தேக்க தொட்டி மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்படும். இதற்கு அந்த பகுதியில் உள்ள சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அல்லது தனியார் நிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் சீனிவாசன், சங்கரன், நிர்வாக பொறியாளர் செந்தில்நாதன், ராஜசேகர், உதவி நிர்வாக பொறியாளர் சேகர், உதவி பொறியாளர்கள் ரகோத்சிங், கோவிந்தன், நவீன், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com