

நந்திகிராம்:
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பர்பா மேதினிபூர் மாவட்டத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மம்தாவின் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த சுவேந்து அதிகாரியே, மம்தாவை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அங்கே களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த தேர்தலில் மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி கடும் போட்டி அளித்து வருகிறார்.
ஆனால் இந்த தொகுதியில் வெல்வது தனது கவுரவ பிரச்சினையாக பார்க்கும் மம்தா பானர்ஜி, எப்படியாவது நந்திகிராமில் வெற்றிக்கனியை பறிக்க போராடி வருகிறார். இதற்காக பல்வேறு கட்ட பிரசாரங்களில் ஈடுபட்டு இருக்கும் அவர், அதன் தொடர்ச்சியாக நேற்று பிரமாண்ட பேரணி ஒன்றையும் நடத்தினார்.
ரியாபரா குதிராம் என்ற பகுதியில் இருந்து தாகூர்சவுக் வரை 8 கி.மீ. தொலைவுக்கு இந்த பேரணி நடந்தது. சக்கர நாற்காலியில் அமர்ந்து பேரணிக்கு தலைமை தாங்கி சென்ற மம்தா பானர்ஜி, வழிநெடுகிலும் மக்களிடம் இருகரம் கூப்பி ஆதரவு கோரினார்.
அவருடன் நூற்றுக்கக்கான கட்சித்தொண்டர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் நடந்து சென்றனர். அவர்கள் வழி நெடுகிலும் மம்தா பானர்ஜியை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர்.
நந்திகிராம் தொகுதியில் வருகிற 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை தொகுதியை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என பேரணியில் அவர் அறிவித்தார்.
இந்த பேரணியை தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பா.ஜனதா தொண்டர் ஒருவரின் தாயின் மரணம் தொடர்பாக பேசினார்.
82 வயதான அவரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் நேற்று கண்டித்திருந்தார்.
ஆனால் பா.ஜனதா தொண்டரின் தாய் இறந்ததற்கான உண்மையான காரணம் குறித்து தெரியாது என மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதேநேரம் உள்துறை மந்திரிக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அந்த சகோதரி (பா.ஜனதா தொண்டரின் தாய்) எப்படி இறந்தார்? என்பது எனக்கு தெரியாது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் ஆதரிப்பதில்லை. எனது சகோதரிகள், தாய்மார்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம்’ என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘இந்த பிரச்சினையை பா.ஜனதாவினர் அரசியலாக்குகின்றனர். அமித்ஷா இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டு வங்காளத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளார். ஆனால் உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்டபோது அவர் மவுனமாக இருந்தது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறிய அவர், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியிருப்பதால், சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்போது தேர்தல் கமிஷனின் கீழ் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.