

ராஜபாளையம்:
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜோதிலிங்கம் என்பவர், தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்து உள்ள திருவண்ணாமலை பகுதிக்கு செங்கல் சூளைக்கு தேவையான மண்ணை, லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்த லாரி ராஜபாளையம்-மதுரை சாலையில் உள்ள மாயூரநாதர் சுவாமி கோவில் முகப்பில், அமைந்துள்ள ஆதி வழிவிடு விநாயகர் கோவில் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதைதொடர்ந்து சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியதோடு கோவில் சுவரில் முட்டி நின்றது. இந்த விபத்தில் மரம் வேருடன் சாய்ந்த நிலையில், கோவில் சுவரும் சேதமடைந்தது. வேரோடு சாய்ந்த மரம் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மரத்தை வெட்டி அகற்றினர். 30 நிமிடத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஜோதிலிங்கம் காயமின்றி தப்பினார்.