

லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மணக்கால் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன்அசோகன் (45). கூலி வேலை செய்யும் இவருக்கு ஒரு அண்ணன், 3 தம்பிகள் உள்ளனர். சமீபத்தில் தந்தை இறந்ததால் சொத்துக்களை பிரித்துக் கொண்டு அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.
அசோகனுடன் 2-வது தம்பி பிரேம்குமார் (40) ஒரே வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரேம் குமாருக்கு வேறு பகுதியில் சொத்து பிரித்து கொடுக்கப்பட்டதாகவும், வீடு இல்லாத நிலையில் அசோகன் குடியிருக்கும் வீட்டிலேயே ஒரு அறையில் இருந்து வந்துள்ளார்.
சொத்து பிரிக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டியதும் தற்போது உள்ள வீட்டின் அறையை காலி செய்து விட்டு சென்று விடுவதாக கூறியுள்ளார். இதற்கிடையே அசோகன், பிரேம்குமார் இருவர் குடும்பத்திற்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சொத்து சம்மந்தமாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அசோகனை தலையில் வெட்டியுள்ளார். பிறகு தடுக்க முற்படும் போது வலது கையில் வெட்டப்பட்டு விரல்கள் துண்டாக விழுந்தது. உடனே அவர் அலறினார். அவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பிறகு அசோகனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொத்துக்காக அண்ணணை அரிவாளால் வெட்டிய பிரேம்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசா ரணை நடந்து வருகிறது.