குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை- நாளை இரவு நடக்கிறது

2019-ம் ஆண்டு விடை பெற்று புத்தாண்டான 2020 வருகிற 1-ந்தேதி பிறக்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆலயம்
ஆலயம்
Published on

நாகர்கோவில்:

2019-ம் ஆண்டு விடை பெற்று புத்தாண்டான 2020 வருகிற 1-ந்தேதி பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின் விளக்கு அலங்காரங்களில் ஜொலிக்கிறது.

நாளை (31-ந்தேதி) இரவு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோட்டார் தூய சவேரியார் ஆலயத்தில் நாளை இரவு 11.30 மணிக்கு கோட்டார் ஆயர் நசரேன் சூசை சிறப்பு திருப்பலி நடத்துகிறார். திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறு வேலும், மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோசும் புத்தாண்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்கள். தக்கலையில் நடைபெறும் திருப்பலியில் தக்கலை ஆயர் ஜார்ஜ் மார் ராஜேந்திரன் திருப்பலியை நடத்துகிறார்.

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம், நாகர்கோவில் அசிசி ஆலயம், குளச்சல் புனித காணிக்கை மாதா ஆலயம், புன்னைநல்லூர் லூர்து அன்னை ஆலயம், களியக்காவிளை அந்தோணியார் ஆலயம், மார்த்தாண்டம் சவேரியார் ஆலயம், தக்கலை எலியாசியார் ஆலயம் ஆகியவற்றிலும் 2020 புத்தாண்டை வரவேற்று பிரார்த்தனை நடைபெற உள்ளது.

அதேப்போல நாகர்கோ வில் ஹோம் சர்ச் உள்பட சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும், பெந்தேகோஸ்தே, சீரோ மலபார், இரட்சண்யசேனை உள்பட பல்வேறு சபை ஆலயங்களிலும் புத்தாண்டு ஆராதனைகள் நடைபெறுகிறது.

பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். மேலும் புத்தாண்டு கேக்குகளை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒருநாள் தான் உள்ளது. இதனால் புத்தாடைகள், கேக், இனிப்புகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com