இன்று சனிப்பெயர்ச்சி: குச்சனூர் சனிபகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தேனி அருகில் உள்ள குச்சனூர் சனிபகவான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இன்று சனிப்பெயர்ச்சி: குச்சனூர் சனிபகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

சனிபகவான் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனையொட்டி சனிபகவான் எழுந்தருளியுள்ள கோவில்களில் பக்தர்கள் இன்று குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூரில் சுயம்பு வடிவில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழாவும் 2½ வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சனிபெயர்ச்சியும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அதன்படி இன்று காலை 10.02 மணிக்கு சனிபகவான் பெயர்ச்சியாவதை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கோவில் முன்பாக உள்ள புண்ணிய நதியான சுரபி நதியில் நீராடி அதன்பின் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்ய தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், கரூர், நெல்லை, ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் வந்திருந்தனர்.

பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுரபி நதியில் பாதுகாப்பாக குளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் வசதிக்காக 50 தற்காலிக கழிப்பிடங்கள் மற்றும் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. மாற்று திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் கூட்ட நெரிசலில் செல்லாமல் தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சின்னமனூர், கம்பம், தேனி, தேவாரம் மற்றும் போடி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com