தக்கலை குமாரகோவிலில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.- சப்-கலெக்டர் திருமணம்

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன் -ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யர் திருமணம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை நடந்தது. திருமணத்தை முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.
சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் கழுத்தில் தாலிகட்டிய சபரிநாதன் எம்.எல்.ஏ.
சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் கழுத்தில் தாலிகட்டிய சபரிநாதன் எம்.எல்.ஏ.
Published on

கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன்.

இவருக்கும், திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்தை குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சபரிநாதன் எம்.எல்.ஏ.-ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யர் திருமணம் குமாரகோவில் முருகன் இன்று காலை 9.40 மணிக்கு நடந்தது. காலை 9 மணிக்கே கோவிலுக்கு வந்த இரு வீட்டாரும் அங்கு நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பின்பு கோவில் முன்புள்ள மண்டபத்தில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்தனர். கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்தார். அதனை சபரிநாதன், திவ்யா எஸ். அய்யர் கழுத்தில் கட்டினார்.

திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களை தவிர கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கண்ணாட்டு விளை பாலையா, தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹனு குமார் உள்பட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சப்-கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர்- சபரிநாதன் எம்.எல்.ஏ. திருமண விழாவில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி பங்கேற்றபோது எடுத்தப்படம்.

சபரிநாதன் எம்.எல்.ஏ., கேரள முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயனின் மகன் ஆவார். என்ஜினீயரிங் படித்துள்ள இவர், மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். கார்த்திகேயன் திடீரென மரணம் அடைந்து விட ஊர் திரும்பினார்.

கார்த்திகேயன் மறைவால் காலியான அருவிக்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ. ஆன பின்பு தொகுதி பிரச்சனைக்காக திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யரை சந்தித்தார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்ள அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

சபரிநாதனுடன் காதல் மலர்ந்தது பற்றி திவ்யா எஸ். அய்யர் கூறியதாவது:-

சபரிநாதன் என்னுடன் அலுவல் ரீதியாக பேசினார். அதன் பிறகு இருவரும் எங்களின் தனிப்பட்ட விருப்பங்களை பேசிக் கொண்டோம். அப்போது எனக்கு விருப்பமான இசை, சினிமா, புத்தகம் படித்தல் போன்றவற்றில் அவரும் ஆர்வமாக இருப்பதை அறிந்தேன். அந்த ஆர்வம் அவர் மீது காதலாக மாறியது.

காதல் மலர்ந்த பின்பு அவரை சந்திக்க வெட்கமாக இருந்தது. அப்போது நான், கல்லூரி பருவத்தை நினைத்துக்கொண்டேன். இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க்கிறது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்ததும் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜூன் 30-ந் தேதியான இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனது திருமணம் இன்று நடந்தது போல ஜூன் 30-ந் தேதி தான் நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டேன். அதனால் இந்த 30-ந் தேதியை என்னால் மறக்க முடியாது.

நாங்கள் இருவரும் காதலித்தபோது முருகன்- வள்ளியுடன் குடிகொண்டிருக்கும் கோவலில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அது பெற்றோர் விருப்பம் மக்களின் அன்பு ஆகியவற்றால் இன்று நிறைவேறி உள்ளது. இதற்காக எங்களோடு துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com