தந்தையை இழந்த தமிழக மாணவருக்கு உதவி - கேரள முதல்வரின் மனிதநேயத்துக்கு குவியும் பாராட்டு

கேரளாவில் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்த நிலையில், உடனடி நடவடிக்கைகள் எடுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தந்தையை இழந்த தமிழக மாணவருக்கு உதவி - கேரள முதல்வரின் மனிதநேயத்துக்கு குவியும் பாராட்டு
Published on

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் மாணவர்கள் மொழி புரியாமல், தேர்வு மையங்களை கண்டு பிடிக்க வழி அறியாமல் தவிப்பதை தடுக்க கேரள மாநில அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

குறிப்பாக திருவனந்தபுரம் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், எர்ணாகுளம், திருச்சூர் பஸ் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு தமிழ் தெரிந்த உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தமிழ் மாணவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தவிர போலீசாரும் தமிழக மாணவர்கள் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தமிழக மாணவர்களின் தேர்வு மையம் எங்கிருக்கிறது, அதற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதையும் அவர்கள் மாணவர்களுக்கும், அவர்களுடன் வந்த பெற்றோருக்கும் பொறுமையாக எடுத்து கூறினர்.

இதற்காக திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
கேரளாவில் இத்தனை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் திருவாரூரில் இருந்து எர்ணாகுளம் சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் பலியாகி விட்டார்.

அவர், இறந்த தகவல் கேரள அதிகாரிகள் மூலம் உடனடியாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், எர்ணாகுளம் கலெக்டர் அஹ்மத் சபியுல்லாவை தொடர்பு கொண்டு எர்ணாகுளம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் மனம் உடைந்து விடாமல், தந்தை இறந்த தகவலை அவரிடம் தெரிவித்து ஆறுதல் கூறும்படி உத்தரவிட்டார்.

முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவுப்படி, கலெக்டர் அஹ்மத் சபியுல்லா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். கிருஷ்ணசாமியின் மகன் தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்ததும், அவரை போலீசார் துணையுடன் பத்திரமாக வெளியே அழைத்து வந்தார்.

பின்னர் அதிகாரிகள் மூலம் அவருக்கு தந்தை இறந்த தகவல் பக்குவமாக தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு ஆறுதல் கூறி அவருடனேயே இருந்தனர்.


மாலையில் கஸ்தூரி மகாலிங்கத்தின் உறவினர்கள் திருவாரூரில் இருந்து வந்த பின்னரே கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்சை கேரள மாநில எல்லை வரை கேரள போலீசார், வருவாய் அதிகாரிகள் உடன் சென்று அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணசாமியின் உடல் கேரள எல்லையை தாண்டும் வரை நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிகாரிகள் மூலம் கேட்டு அறிந்தபடி இருந்தார். எந்த இடத்திலும் தவறு நேர்ந்து விடக்கூடாது, தந்தையை இழந்த மகன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என பினராயி விஜயன் மிகவும் கவனமாக செயல்பட்டார். இதன் காரணமாகவே கிருஷ்ணசாமியின் உடல் நேற்று மாலையிலேயே சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் இந்த மனிதநேய செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற தமிழக மாணவர்களின் பெற்றோரும் அங்கு தமிழக மாணவர்களுக்காக கேரள அரசு மற்றும் போலீசார் செய்திருந்த ஏற்பாடுகளை வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com