

பாக்தாத்:
ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ளது அல் பஹெய்மி ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையம் நேற்று முன்தினம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது இந்த ரெயில் நிலையத்துக்குள் ஐ.எஸ். தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் ஊடுருவ முயற்சித்தனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் கண்டு கொண்டனர். உடனே அவர்களை வழிமறித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர்கள் 3 பேரையும் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால், அந்த ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவலை ஈராக் ராணுவ அமைச்சகத்தின் போர் ஊடக பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று முன் தினம் தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், மருந்துப்பொருட்கள் போன்றவற்றை அனுப்புவதில் உறுதுணையாக இருந்து வந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ஈராக் படையின் வான்தாக்குதலில் சிக்கி பலியாகி விட்டார். அவர் பயணம் செய்த வாகனத்தை பவுத்ஜா-குசெய்பா கிராமங்களுக்கு இடையே குறி வைத்து நடத்தப்பட்ட குண்டுவீச்சில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.