ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இன்று காலை ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர்.
ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்
Published on

ஆலந்தூர்:

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், முனுசாமி, பாண்டி, சின்னையா, ராசு, மற்றொரு கண்ணன், தங்கசெல்வம், லிங்கேஸ்வரன், பாலமுருகன், ராஜேந்திரன், மரியச்செல்வம், குப்புசாமி, லூயிஸ், நந்து குமார் ஆகிய 15 பேர் கடந்த ஆண்டு துபாய்க்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர். அங்கு தனியார் நிறுவனம் மூலம் கடலில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 15 பேர், 2 குஜராத்தியர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி ஈரான் கடற்படை அவர்களை கைது செய்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மத்திய வெளியுறவு துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கடந்த மே 28-ந்தேதி ஈரான் விடுதலை செய்தது. அவர்களை துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது.

15 தமிழக மீனவர்களும் துபாயில் இருந்து இன்று காலை ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

மீனவர்கள் கூறுகையில், “எல்லை தாண்டி வந்ததாக கூறி எங்களை கைது செய்த ஈரான் கடற்படை சில நாட்கள் கப்பலிலும், சிறையிலும் அடைத்தனர். எங்களுக்கு தண்ணீர், உணவு கூட தரவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com