சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 319 ரன்கள் குவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் பந்துவீச்சை பந்தாடிய இந்திய அணி 319 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 324 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 319 ரன்கள் குவிப்பு
Published on

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடினர். 10-வது ஓவரின் போது மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து ஆடிய துவக்க வீரர்கள் இருவரும் அரை சதம் கடந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து முன்னேறிய ஷிகர் தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 136 ரன்கள் குவித்தது. அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் இணைந்த கேப்டன் கோலி, நிதானமாக விளையாடினார்.

34-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 173 ஆக இருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டு ஆடுகளம் மூடப்பட்டது. ரோகித் சர்மா 77 ரன்களுடனும், கோலி 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. அப்போது போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 91 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியுடன் யுவராஜ் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் அணியின் ஸ்கோரும் விறுவிறுவென உயர்ந்தது.

யுவராஜ் சிங் 32 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தான் பந்துவீச்சை விளாசினார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. கோலி 81 ரன்களுடனும், பாண்ட்யா 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் 4 பேரும் அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஷதாப் கான் ஆகியோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com