

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் மருத்துவ விசாவில் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 நோயாளிகள் வரை பாகிஸ்தானில் இருந்து வருவதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மருத்துவ செலவு ஆகிறது.
ஆனால், தற்போது இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை காரணமாக, மருத்துவ விசா நடைமுறைகள் மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கென் சித் என்பவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது குழந்தை (இரண்டரை மாதம்) இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ விசா வழங்க உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை உடனடியாக கவனத்தில் கொண்ட சுஷ்மா, ‘குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. நீங்கள் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் மருத்துவ விசா வழங்குவோம்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, இந்திய தூதரகத்தை சென் சித் அணுகினார். அவரது விசா விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலித்த தூதரகம், அவரது குடும்பத்தினருக்கு 4 மாத மருத்துவ விசா வழங்கியுள்ளது. எனவே, கென் சித்திக்கின் குழந்தையை இந்தியாவிற்கு கொண்டு வந்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.