உடல் உறுப்பு தானத்தில் பின் தங்கியுள்ள இந்தியா: மத்திய அரசு தகவல்

இந்தியா உடல் உறுப்பு தானம் செய்வதில் உலக அளவில் பின் தங்கிய நிலையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் பின் தங்கியுள்ள இந்தியா: மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி:

உலகம் முழுவதும் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி அனுபிரியா படேல் பதில் அளித்தார். அப்போது, ‘இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதாவது பத்து லட்சத்திற்கு 20 லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே தானம் செய்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

எனினும், உடல் உறுப்பு தானம் தொடர்பாக பிரதமர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்ததையடுத்து, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக பேசிய சசி தரூர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதில் மக்களுக்கு முன்னோடியாக திகழ வேண்டும் என கூறினார்.

மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா பேசும்போது, ‘அரசாங்கம் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கு விதிமுறைகளில் பல மாற்றங்களை செய்துள்ளது. மேலும் ஆண்டிற்கு 1.5 லட்சம் பேர் விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன’ என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com