இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் பிரச்சனை - தாய்வீட்டுக்கு சென்ற புது மனைவி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது மூன்றாவது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #ImranKhan #BushraManek
இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் பிரச்சனை - தாய்வீட்டுக்கு சென்ற புது மனைவி
Published on

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் கடந்த பிப்ரவரி மாதம் புஷ்ரா மனேகா என்ற விவாகரத்து பெற்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். ஆன்மிக இளைப்பாறலுக்காக புஷ்ரா மனேகாவை அடிக்கடி சந்தித்துவந்த இம்ரான் கான் அவரை காதலித்து வந்ததாக முன்னர் வெளியான தகவல்களுக்கும் வதந்திகளுக்கும் இந்த திருமணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


திருமணமானதும் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இம்ரான் கானின் மாளிகைக்கு வந்த புஷ்ரா மனேகா, அங்கு ஏராளமான வளர்ப்பு நாய்கள் இருப்பதை கண்டு எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. ஆன்மிகம் மற்றும் வழிப்பாட்டில் ஈடுபடுபவர்கள் வசிப்பிடத்தில் நாய்கள் வளர்ப்பது சரியல்ல என்னும் மனேகாவின் விருப்பப்படி அந்த நாய்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறொரு இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.

திருமணத்துக்கு முன்னர் புஷ்ரா மனேகாவிடம் இம்ரான் கான் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டரங்கள் குறிப்பிட்டிருந்தன. அதில் முக்கிய நிபந்தனை, புஷ்ரா மனேகாவின் உறவினர்கள் யாரும் இம்ரான் கான் வீட்டில் அதிக நாட்களுக்கு தங்கி இருக்க கூடாது என்பதாகும்.

இதைமீறிய வகையில் புஷ்ரா மனேகாவின் முதல் கணவர் மூலமாக பிறந்த மகன் கவார் ஃபரின் என்பவர் இம்ரான் வீட்டில் தனது தாயாருடன் தொடர்ந்து இருந்துள்ளார்.

இதுதொடர்பாக, இம்ரான் கானுக்கும் புஷ்ரா மனேகாவுக்கும் இடையே எழுந்த பிரச்சனையில் புஷ்ரா மனேகா இம்ரானை பிரிந்து, அவரது தாய்வீட்டுக்கு சென்று விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com