சொத்துகளின் சந்தை மதிப்பு எவ்வளவு?: பதிவுத்துறை இணையதளத்தில் கிராமம் வாரியாக வெளியீடு

சொத்துகளின் சந்தை மதிப்பு வழிகாட்டி, வருவாய் கிராம வாரியாக பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயம் செய்வதற்காக, மாவட்டம்தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பீட்டுத் துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, புல எண்கள் வாரியாக அல்லது தெருக்களின் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு, பதிவுத்துறை இணையதளத்தில் ( www.tnreginet.net ) வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பதிவுத்துறை இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதிவு மண்டலம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியவற்றை தெரிவு செய்து, பின்னர் தேவைப்படும் குறிப்பிட்ட தெரு அல்லது புல எண்ணிற்குரிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள, இத்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமத்தின் அனைத்து புல எண்கள் மற்றும் அனைத்து தெருக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டியை ஒரே நேரத்தில் பார்வையிட இயலவில்லை என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பதிவுத்துறைக்கு வரப்பெற்றன.

பொதுமக்களின் கோரிக்கைகள், மாநில அளவிலான சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பீட்டுக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமத்தின் அனைத்து புல எண்கள் மற்றும் அனைத்து தெருக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டியை, ஒரே நேரத்தில் எளிதில் பார்வையிட ஏதுவாக பிடிஎப் வடிவத்தில் வருவாய் கிராமவாரியாக, பதிவுத்துறை இணையதளத்தில் ( www.tnreginet.net ) வெளியிட முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட மாநில அளவிலான சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பீட்டுக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவிற்கேற்ப, தற்போது பதிவுத்துறையின் இணையதளத்தில், ( www.tnreginet.net ) பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பதிவு மண்டலம், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியவற்றை தெரிவு செய்து, அந்த குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து புல எண்கள் (அல்லது) அனைத்து தெருக்களின் சந்தை வழிகாட்டி மதிப்புகளை பிடிஎப் வடிவத்தில் எளிதில் பார்வையிடலாம்.

மேலும், அந்த விவரங்களைப் பதிவிறக்கம் செய்து தங்களது தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியில், முரண்பாடுகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள், அவ்விவரத்தினை தக்க ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, முரண்பாடுகள் ஏதும் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த முரண்பாடுகள் களையப்படும். எனவே, பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி சந்தை மதிப்பு வழிகாட்டி குறித்த தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com