

சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவுகளை பின்பற்றி பிறப்பிக்கப்பட வில்லை என்றும், அதனால், இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்கும் விதமாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘உள்ளாட்சி தேர்தலை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கும் விதமாக, தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், ‘தனி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்துள்ள விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. இந்த விதிமுறைகளை அமல்படுத்திய பின்னர், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் இருந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பது வரையிலான பணிகளை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவைப்படும்’ என்று வாதிட்டார்.
இதற்கு தி.மு.க. தரப்பு வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை தமிழக அரசு நினைத்தால், ஒரே நாளில் அமல்படுத்த முடியும். ஆனால், இந்த தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கப்படுகிறது என்று கூறினார்.
இந்த வழக்கில் ஒரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன், ‘2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையிலும், 1991-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி வரையறையின் அடிப்படையிலும் தற்போது தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. இதை ஏற்க முடியாது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள், பதவிகள் வரையறை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளில், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வக்கீல் எம்.பழனிமுத்து ஆஜராகி வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.