தமிழகம் முழுவதும் ‘மதுபான பார்’ ஏலம் தொடர்பான அறிவிப்புகள் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் மதுபான பார்கள் ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் பிறப்பித்த அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ‘மதுபான பார்’ ஏலம் தொடர்பான அறிவிப்புகள் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் பார் அமைப்பதற்கு 2017-18-ம் ஆண்டுக்கான உரிமம் வழங்குவது குறித்து கடந்த மே மாதம் 2 மற்றும் 3-ந்தேதிகளில் டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்புகள் வெளியிட்டது.

இந்த அறிவிப்புகளில், உரிமம் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் தமிழ்மாறன், ஆரோக்கியசாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு மனுவில், ‘மதுபான கடையுடன் கூடிய பார் அமைக்க டாஸ்மாக் நிறுவனம் அதிக விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஏற்கனவே, இது தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு விசாரித்தது.

அப்போது, காலி மது பாட்டில்களை சேகரிக்கவும், பார் நடத்தவும் உரிமம் வழங்குவதற்கான டெண்டர் விதிமுறைகளை முறையாக வகுக்கவும், டாஸ்மாக் கடை விற்பனைக்கேற்ப பாரின் உரிமத்தின் விலையை நிர்ணயிக்கவும் இந்த ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி, பார் உரிமம் அறிவிப்புகளை டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்புகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.வெங்கட்ரமணி மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட பல வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டார்கள்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘பார் உரிமத்துக்கான தொகையை, அந்த மதுபான கடையில் நடைபெறும் மது விற்பனையின் அடிப்படையில் முடிவு செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளபோது, அதை மீறி இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்த அறிவிப்புகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘இந்த அறிவிப்புகளை திரும்ப பெறுவதாகவும், ஐகோர்ட்டு உத்தரவின்படி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘பார் உரிமம் தொடர்பாக கடந்த மே மாதம் 2 மற்றும் 3-ந்தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை ரத்து செய்கிறேன். ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பார் உரிமம் தொடர்பான புதிய அறிவிப்பை 4 வாரத்துக்குள் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட வேண்டும். இந்த வழக்குகளை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com