

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகார பூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது.
எனவே ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அணியில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையம் எத்தனை நாளில் முடிவெடுக்கும் என்பது பற்றி விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் வக்கீலுக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இரட்டை இலை சின்னத்தை யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து 16 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால் இந்த பிரச்சனையில் மார்ச் மாதம் 2 அணிகள் சார்பிலும் மனு கொடுத்தும் தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு எடுக்காமல் உள்ளது.