

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இந்த வாரம் பரவலாக மழை பெய்தது. அது தற்போது வலுவிழந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.
இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணமலை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் குறைந்துள்ளது.