ஊட்டியில் கனமழை: 23 இடங்களில் மண் சரிவு

ஊட்டியில் பெய்து வரும் கன மழையால் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

ஊட்டி:

வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

ஊட்டியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இன்றும் மழை தொடர்ந்து நீடிக்கிறது. மழை காரணமாக 48 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. ஊட்டி- கோத்தகிரி சாலையில் குந்தா, அவலாஞ்சி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

தும்மணட்டியில் இன்று காலை ராட்சத மரம் ரோட்டில் விழுந்தது. இதனால் கோத்தகிரி செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்க கட்டிடத்தின் மீது மிகப்பெரிய மரம் விழுந்தது. இதனை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

இன்று காலை கோத்தகிரி பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பலத்த மழை பெய்து வருவதால் ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மண் சரிவு மற்றும் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் வெலிங்டன் அருகே மண் சரிவு ஏற்பட்டதுடன் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்ததால் மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டு பயணிகள் ஊட்டிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதே போல் ஊட்டி-குன்னூர் மலை ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கான மலை ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் டிரைவர் பாபு என்பவர் பிக் அப் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். பலத்த மழை காரணமாக இந்த வாகனம் திடீரென பின் நோக்கி சென்றுள்ளது. அப்போது தடுப்பு சுவரை இடித்து கொண்டு கோவில் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் என்ற இடத்தில் திடீரென மரம் விழுந்தது. மரம் விழுந்த வேகத்தில் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. மரம் விழுந்த போது அந்த வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி அரசு பஸ் வந்தது. திடீரென மலையில் இருந்து மரம் ரோட்டில் விழுவதை பார்த்த டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார்.

இதனால் பஸ் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. அதில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பினர்.

கோத்தகிரியில் பெய்த மழையின் காரணமாக 4 வீடுகள் சேதம் அடைந்தது. கொட்டக்கம்பை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. வீட்டையொட்டி ஓடையில் மழை வெள்ளம் செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலையில் காணப்படுகின்றன. மழை காரணமாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மேகமுட்டம் நிலவி வருகிறது. கடுங்குளிரும் வீசி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com