

கொடைக்கானல்:
கொடைக்கானலில் நேற்று காலை பலத்த காற்று வீசியதில் ஏரிச்சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2.30 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக நகரை அடுத்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இருப்பினும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணை பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. அப்சர்வேட்டரியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4.1 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவானது. நகர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.